Monday, 8 October 2012

சந்தோஷத்தின் வழி!!!




ஒருவர் எப்போதுமே மனது கஷ்டத்துடன் வாழ்ந்து வந்தார். ஒரு நேரத்தில் அவரால், மனக்கஷ்டத்தை தாங்க முடியவில்லை. அதனால் அவர் ஒரு ஜென் துறவியை நாடி, அதற்கான காரணத்தை அறிய வேண்டும் என்று முடிவெடுத்து, துறவியைப் பார்க்க புறப்பட்டார்.

துறவி ஒரு மரத்தின் அடியில் தியானம் செய்து கொண்டிருந்தார். அவரிடம் அருகில் சென்று "குருவே! எனக்கு எப்போதுமே மனம் கஷ்டமாக உள்ளது. அதை எப்படி போக்குவது?" என்று கேட்டார். அதற்கு குரு அவரிடம், "ஒவ்வொரு நாளும் காலையில் எழும் போது நீ என்ன நினைப்பாய்?" என்று கேட்டார்.

அதற்கு வந்தவர், "இன்றும் மனம் கஷ்டமாக இருக்குமோ! என்று நினைத்து எழுவேன்" என்றார். அப்போது குரு "இது தான் தவறு. நீ உன் மனம் கஷ்டமாக இருப்பதற்கு நீ தான் காரணம். காலையில் எழும் போது நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று மனதில் நீயாகவே நினைத்தால், கண்டிப்பாக நீ சந்தோஷத்தை உணர்வாய். கஷ்டம் என்று நினைத்தால் கஷ்டத்தை தான் உணர்வாய்" என்று கூறினார்.

ஆகவே எதுவுமே, அவரவர் மனநிலையைப் பொறுத்தே உள்ளது என்பதை இந்த கதை நன்கு தெளிவாக கூறுகிறது.


                                                                                                             - தொடரும்....

ஒரு நல்ல சீடனின் அழகு!!!


ஓர் ஊரில் ஜென் மாஸ்டர் கத்தான் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு குறிப்பில் "ஒரு சீடன் என்பவன் யார்? என்பதை, சீடன் என்பவன் புத்தமதக் கருத்துக்களை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும், மடாலயத்தை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் மற்றும் அரிசி மூட்டை, துணி மூட்டை ஆகியவற்றை எங்கும் பத்திரமாக தூக்கவும், சுத்தமாக அவற்றை வைத்துக் கொள்ளவும் வேண்டும்" என்னும் மூன்று கருத்துக்களின் மூலம் தெளிவாக கூறியுள்ளார்.

அதேப்போல் தான் கசன் என்னும் சீடன், தன் குருவிற்கு மிகவும் ஒரு நல்ல சீடனாக இருந்தான். ஆனால் அவனுடைய குரு மிகவும் கோபம் கொள்பவர். அவர் தன் சீடர்களுக்கு புத்தமதக் கருத்துக்களை சொல்லிக் கொடுக்கும் போது எப்போதுமே மிகவும் கடுமையாகவே இருப்பார். சிலசமயங்களில் அடிக்க கூட செய்வார். அதனாலேயே நிறைய சீடர்கள் அவரிடம் கல்வி கற்காமல் சென்றுவிட்டனர்.

ஆனால் கசன் மட்டும் அவரை விட்டு செல்லாமல், அவருடன் இருந்தான். ஏனெனில் அவன் ஜென் மாஸ்டர் கத்தான் கூறிய ஒரு குறிப்பான "நல்ல சீடனாக இல்லாதவன், எங்கு சென்றாலும் தனது குருவின் செல்வாக்கை பயன்படுத்துவான், நியாயமான சீடனாக இருப்பவன் தனது குருவின் இரக்கத்தால் ஈர்த்து மட்டும் இருப்பான், ஆனால் நல்ல சீடன் என்பவன் அவருடன் இருந்து அவரிடம் இருக்கும் அனைத்தையும் கற்றுக் கொண்டு வளர்வான்" என்பதை படித்ததால், இவனும் ஒரு நல்ல சீடனாக தன் குருவிற்கு இருக்கிறான்.

ஒரு கையின் ஓசை!!!


ஒர் ஜென் மடாலயத்தில் ஒரு பன்னிரண்டு வயதான டோயோ என்னும் சிறுவன் தங்கி வாழ்ந்து வந்தான். அவன் ஒவ்வொரு நாளும் மக்கள் குருவிடம் உதவி, வழிகாட்டல் முறைகளை கேட்டு செல்வதை கவனித்துக் கொண்டிருந்தான். இது போகப்போக அவனை மிகவும் ஈர்த்தது. ஒரு நாள் குரு அதேப்போல் மக்களிடம் அவர்களது குறைகளை கேட்டுக் கொண்டிருக்கும் போது, அவனும் குருவிடம் கேட்பதற்காக, குருவை தன் மீது பார்வை செலுத்த, அவர் முன் மிகவும் மரியாதையுடன் ஏழு முறை தலைகுனிந்து குருவை வணங்கினான். அவனது செயலைக் கண்டு மாஸ்டர் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.

பின் குரு அவனை அழைத்து டோயோ "உனக்கு என்ன வேண்டும்?" என்றார். அதற்கு அவன் குருவிடம் "நான் உண்மையை தேடி வந்துள்ளேன், அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான்.

குருவோ இவன் ஏதோ விளையாட்டாக கேட்கிறான் என்று எண்ணி, அவனிடம் "இரண்டு கைகளை கொண்டு ஒரு ஒலியை உருவாக்க முடியும். ஆனால் ஒரு கை கொண்டு ஒலி எழுப்புவது எப்படி என்பதை கண்டறிந்து என்னிடம் சொல்" என்றார்.

டோயோவும் மரியாதையுடன் மீண்டும் ஏழு முறை தலைகுனிந்து வணங்கிவிட்டு, அவனுடைய அறைக்கு சென்று, தியானம் செய்ய ஆரம்பித்தான். பின்பு மூன்று நாட்கள் கழித்து "நீர் துளிகள் எழுப்பும் ஒலியா?" என்றான். குருவோ "இல்லை" என்றார்.

பின் மரத்தின் அடியில் சென்று தியானம் செய்ய ஆரம்பித்தான். பிறகு மூன்று மாதம் கழித்து, "மரங்களில் வெட்டுக்கிளி எழுப்பும் ஒலியா? காற்றின் ஒலியா?" என்றான். குருவோ "அதுவும் இல்லை. சரியாக தியானம் செய்!" என்று சொன்னார்.

ஒரு வருடம் ஆனப் பின்னரும் அவன் வராததால், குருவே அவனை தேடி வந்தார். அவனோ ஒரு மரத்தின் கீழ் உட்கார்ந்து தியானத்தில் மூழ்கி இருந்தான். அப்போது அவன் உடலில் சில தெரியாத அமைதியான அதிர்வுறும் ஒலியினால், அவனது உடல் மிகவும் மென்மையான வெறும் காற்று நகருவது போல் நடனம் ஆடிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த மாஸ்டர், டோயோவை தொந்தரவு செய்ய விரும்பவில்லை, ஆகவே அவர் அங்கேயே காத்திருந்தார்.

பல மணி மணி நேரம் கடந்துவிட்டது. சூரியனோ மறையும் நிலையில் இருந்தபோது மாஸ்டர் "டோயோ..." என்று அழைக்க, அவன் கண்களை திறந்து "இது தான் அந்த விடை" என்றான்

குருவும் "ஆம், நீ அதை அடைந்து விட்டாய்!" என்றார்

இந்த ஓம் என்ற ஒலி தான் அது. அது தியானம் செய்யும் போது அனைத்து ஒலியும் மனதில் இருந்து மறைந்து, உங்களுக்கு ஒரு குரல் கேட்கும்.

அந்த ஒலி தியானத்தின் முழுமையை அடையும் பொழுதே கேட்கும். அதனால் ஓம் என்ற இசை நம்முள் உணரப்படும். இதைதான் உபநிடதங்கள் ஓம் என்ற ஒலியை ஒரு முழு குறியீடாக அமைத்துள்ளனர்.

குறை சொல்ல வேண்டாம்!!!


துறவி ஒருவர் தன் மடாலயத்தில் சீடர்களுடன் தங்கி வாழ்ந்து வந்தார். அவர் ஒரு நாள் தன் சீடனுடன் டீ குடிக்க சென்றார். அப்போது அந்த சீடனான ரோஷி என்பவன் துறவியிடம் "ஏன் தான் இந்த ஜப்பானியர்கள் இந்த டீ கோப்பையை இவ்வளவு மெல்லியதாக தயாரித்துள்ளனரோ, இது கை நழுவி கீழே விழுந்தாள் உடனே உடைந்துவிடும் போலவும் உள்ளது. இதை கொஞ்சம் பருமனாக செய்திருந்தால் கீழே விழுந்தாலும் உடையாமல் இருக்கும் அல்லவா!" என்றான்.

அதற்கு குருவும் அவனிடம் "அவர்கள் கோப்பையை மெல்லியதாக தயாரித்ததில் தவறில்லை. அவற்றை நம்மால் சரியாகக் கையாளத் தெரியாததே தவறு. முதலில் நாம் எந்த ஒரு பொருளையும் எப்படி கையாள வேண்டும் என்பதை தெரிந்திருக்க வேண்டும். அதை விட்டு மற்றவர்களை குறை கூறுவது தவறு" என்று கூறினார்.

இந்த கதையிலிருந்து என்ன தெரிகிறதென்றால் "நாம் நம்மை பற்றி முழுவதும் அறியாமல் பிறரை குறை கூறுவதில் முழுமையாக உள்ளதால் எல்லாம் தவறாகவே தெரிகிறது. ஆகவே பிறரைக் குறை கூறுவதை நிறுத்திவிட்டு நம்மை நாம் திருத்திக் கொள்ள முயல வேண்டும்" என்பது நன்கு புரிகிறது.

யாருடனும் ஒப்பிட வேண்டாம்!


ஒரு பேராசிரியர் ஒரு ஜென் ஞானியிடம் சென்று, ''நான் ஏன் உங்களைப்போல இல்லை? உங்களைப்போல என்னால் ஏன் அமைதியாய் இருக்க முடியவில்லை? உங்களுக்கு இருக்கும் அறிவு எனக்கு ஏன் இல்லை?'' என்று கேட்டார்.

ஞானி சொன்னார், ''இன்று முழுவதும் என்னுடன் இருந்து என்னை கவனித்து வா. எல்லோரும் சென்றவுடன் உன் கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன்.''அன்று முழுவதும் ஏராளமான மக்கள் ஞானியை வந்து தரிசித்து சென்றனர். மாலையில் எல்லோரும் போன பின் பேராசிரியர் ஞானியிடம் தன் கேள்விக்கு பதில் சொல்ல ஞாபகப்படுத்தினார்.

அன்று பௌர்ணமி. முழு நிலவு வானில் அழகுடன் ஜொலித்தது. ஞானி கேட்டார்,''இன்னுமா உனக்கு பதில் கிடைக்கவில்லை?நான் மக்களுக்கு சொன்ன பதில்களைக் கவனித்திருந்தால் உனக்கு பதில் கிடைத்திருக்கும்.பரவாயில்லை வெளியில் வா.

இந்த அமைதியான தோட்டத்தில் முழு நிலவின் அழகினைப் பார்.இந்த நிலவொளியில் இந்த நீண்ட மரமும் அதன் அருகில் உள்ள செடியும் எவ்வளவு அழகாய் இருக்கின்றன?''. பேராசிரியர் பொறுமை இழந்து தன் கேள்விக்கு பதில் சொல்லுமாறு கேட்டார்.

ஞானி சொன்னார்,''உன் கேள்விக்கு பதில் சொல்கிறேன். இந்த நீண்ட மரமும் அதன் அருகில் உள்ள செடியும் வெகு நாட்களாக என் தோட்டத்தில் இருக்கின்றன. ஆனால் ஒரு நாளும் இந்த செடி தான் ஏன் இந்த பெரிய மரம் போல இல்லை என்று மரத்திடம் கேட்டதில்லை.அதேபோல மரமும் அந்த செடியிடம் தான் ஏன் செடிபோல இல்லை என்று கேட்டதில்லை. மரம், மரம் தான். செடி, செடி தான். மரம் தான் மரமாயிருப்பதிலும்,செடி, தான் செடியாயிருப்பதிலும் மகிழ்ச்சியுடன் தான் இருக்கின்றன என்றார்."
ஒப்பீடு தான் மனிதனின் அனைத்து பிரச்சினைகளுக்கும் மூலக் காரணம்.

விதியின் கதை


போர்க்களத்தில் ஜப்பானிய வீரர்களிடம் மறுநாள் போரில் எப்படி தாக்குதல் நடத்துவது என்பதைப் பற்றி படைத் தளபதி உரையாற்றிகொண்டிருந்தார். எதிரணியினரை விட இவரது அணியில் ணியில் குறைந்த வீரர்களே இருந்தனர். தளபதிக்கு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தாலும், போர் வீரர்களிடையே அச்சமும், சந்தேகமும் சூழ்ந்திருந்தது. அவர்களிடையே நம்பிக்கையை அதிகரிக்கச் செய்ய என்ன செய்வது என்று யோசித்தான் தளபதி.

அனைவரையும் அழைத்தான். " நண்பர்களே, நாம் போரின் இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டோம். தாக்குதலைத் தீவிரப் படுத்தினால் வெற்றி நமதே. ஆனாலும் குறைந்த வீரர்களைக் கொண்டு எவ்வாறு வெற்றி பெறுவது என்ற சந்தேகம் நம்மிடையே சூழ்ந்துள்ளது. அதனால் கடவுளை வேண்டிக் கொண்டு இந்த நாணயத்தை சுண்டுகிறேன். தலை விழுந்தால் தாக்குதலைத் தொடரலாம். வெற்றி நமதே. பூ விழுந்தால் தோல்வி. நாம் சரணடைந்து விடலாம்" என்றான்."தலைவிதியை நாணயம் தீர்மானிக்கட்டும்" என்றான்.

அனைவரும் ஆமோதித்தனர். கடவுளை வேண்டியவாறே சுண்டினான். விழுந்தது தலை. வீரர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி. தன்னம்பிக்கை பொங்க தாக்குதலைத் தொடர்ந்தனர். வெற்றி வாகை சூடினார்கள்.

போர் முடிந்ததும் தளபதியின் உதவியாளன் , "தலை விதியை யாராலும் மாற்ற முடியாது. நாணயம் காட்டியது சரியாக இருக்கிறது"என்றான். தளபதியும் சிரித்துக் கொண்டே சொன்னான் "சரியாகச் சொன்னாய்" என்றவாறே, நாணயத்தை அவனிடம் காட்டினான். "நாணயத்தின் இருபக்கங்களும் தலை"

கருத்து: நம்பிக்கை தான் வெற்றியைத் தருகிறது.

பயனற்ற வாழ்கை


வயதான விவசாயிக்கு சிறிது நிலம் இருந்தது. வயதான காரணத்தினால் அவரால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. வீட்டில் பேசாமல் உட்கார்ந்து கொண்டிருந்தார். அந்த விவசாயிக்கு ஒரு மகன் இருந்தான். அவன் நிலத்தில் வேலை செய்து விட்டு வந்து தனது தந்தையை பார்த்தான்.

தந்தை ஒரே இடத்திலேயே உட்கார்ந்து கொண்டிருந்தார். இதனைப் பார்த்த மகன் இனி தந்தை நமக்கு பயன்பட மாட்டார் என்று எண்ணி சவப்பெட்டி ஒன்றை செய்து வீட்டிற்கு எடுத்து வந்தான்.

அதைக் காட்டி தனது தந்தையிடம் சவப்பெட்டிக்குள் சென்று படுத்துக் கொள் என்று கூறினான்.அதிர்ச்சியடைந்த தந்தையோ ஒன்றும் கூறாமல் உள்ளே ஏறி படுத்துக் கொண்டார். என்னை கொண்டுபோய் எறிந்து விடப்போகிறாய் என்று தெரியும் அதற்கு முன்னதாக உனக்கு ஒன்று கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன் என்று வயதான தந்தை தனது மகனைப் பார்த்து கேட்டார்.

உடனே மகன் வெறுப்புடன், "என்ன கூற வேண்டும்?" என்று கேட்டான்.

"என்னோடு சேர்த்து இந்த சவப்பெட்டியையும் எறிந்து விடாதே. இதை பத்திரமாக வைத்துக் கொள். ஏனெனில் உனது மகனுக்கு இது உதவியாக இருக்கும்" என்று கூறினார் அந்த வயதான தகப்பனார்.

கருத்து: முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

எங்கே தொடங்கியதோ அங்கேயே முடியும்


ஒரு ஊரில் கல் உடைக்கும் தொழிலாளி ஒருவன் இருந்தான். அவன் தன் வாழ்க்கை நிலை பற்றி அதிருப்தியும், கவலையும் அடைந்திருந்தான். ஒரு நாள் ஒரு செல்வந்தனின் வீட்டின் வழியே சென்றான். வெளியில் இருந்து பார்த்தான், செல்வந்தனின் செல்வச் செழிப்பும், அவன் வீட்டிற்கு வரும் பெரிய மனிதர்களைப் பார்க்கும் போது பேராசையும் பொறாமையும் அடைந்தான். கடவுளிடம் தன்னை செல்வந்தனாக மாற்றிவிடுமாறு வேண்டினான். கடவுளும் இசைந்து அவனை செல்வந்தனாக மாற்றினார்.

செல்வ வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருந்த அவன் வீட்டிற்கு, வருமான வரித் துறை அதிகாரி தன் சகாக்களுடன் காரில் வந்து இறங்கினான். அந்த அதிகாரியின் பேச்சைக் கேட்கும் ஊழியர்கள், அவனுக்கு இருக்கும் மரியாதை ஆகியவை செல்வந்தனாக இருந்த தொழிலாளியைக் கவர்ந்து விட்டன. உடனடியாக வருமான வரித் துறை அதிகாரியாக ஆசைப்பட்டான். கடவுளும் அவனை வருமான வரித் துறை அதிகாரியாக மாற்றினார்.

வருமான வரித் துறை அதிகாரியான அந்த கல் உடைக்கும் தொழிலாளி எல்லோர் வீட்டிற்கும் சோதனைக்குச் சென்றான். அனைவரின் வெறுப்புக்கும் ஆளானான். கோடை காலம் வந்தது. வெந்து தணிந்தது அவன் உடம்பு. சூரியனைப் பார்த்தான். யாருக்கும் பயப்படாத, எல்லோரையும் சுட்டெரிக்கும் சூரியன் போல் மாறிடத் துடித்தான்.

கடவுளும் அவனை சூரியனாக மாற்றினான். தன் கதிர்களால் பிரகாசமான வெளிச்சத்தையும், சூட்டையும் வாரித் தெளித்த சூரியனை விவசாயிகள் திட்டினர். பெரும் மேகம் ஒன்று வந்தது. சூரியனின் வெளிச்சத்தை அது மறைத்தது. இருட்டாக்கியது. மழை மேகமாய் மாற்றி விடுமாறு கடவுளை வேண்டினான்.

மழை மேகமாய் மாறி, மழையாய்ப் பொழிந்து, வெள்ளமாய் பெருக்கெடுத்து விவசாயிகளின் வயிற்றெரிச்சலைப் பெற்றான். மேகமாக மாறிய அவனை ஏதோ சக்தி மிகுந்த ஒன்று இழுத்துச் செல்வதைப் பார்த்தான். காற்று என அறிந்ததும், காற்றாகி விடுமாறு கடவுளை வேண்டினான்.

காற்றாக மாறி, சந்து பொந்துகளில் எல்லாம் புகுந்து வந்தான். கூரை வீடுகளையும், மரங்களையும் சாய்த்தான். ஆனால் தன்னால் பெரும் பாறை ஒன்றினுள் புக முடியாததை எண்ணி தன்னை பாறையாக மாற்றி விடுமாறு கடவுளை வேண்டினான்.

பாறையாக மாறிய அவன் தன்னைப் போல் சக்தி மிகுந்தது இந்த உலகில் எதுவும் இல்லை என்று பெருமிதம் அடைந்தான். உடனே தன்னை சுத்தி மற்றும் உளியால் பிளக்க வந்த தொழிலாளியைப் பார்த்த்தும், கடவுளிடம் தன்னைப் பழையபடி கல் உடைக்கும் தொழிலாளியாகவே மாற்றிவிடும் படி மன்னிப்புடன் வேண்டினான். கடவுளும் வாழ்க்கையை உணர்ந்த அவனை கல் உடைக்கும் தொழிலாளியாகவே மாற்றிவிட்டார்.

கருத்து: வாழ்க்கை என்பது முடிவும் தொடக்கமும் ஒன்றாகவே அமைந்த ஒரு வட்டம்.

புத்திசாலி பேய்


ஒருவனின் மனைவி மிகவும் உடல் நிலை சரியில்லாமல் படுக்கையில் இருக்கிறாள். சாகும் தருவாயில் அவள் அவனிடம், "நான் உன்னை உயிருக்குயிராக நேசிக்கிறேன்,அதனால் உன்னை விட்டுப் பிரிய எனக்கு விருப்பமே இல்லை. நான் இறந்தபின், நீ யாரையும் கல்யாணம் செய்துக்கொள்ள மாட்டேன் என்று எனக்கு ஒரு சத்தியம் செய்துக் கொடு. அப்படி மீறி நீ யாரையாவது கல்யாணம் செய்துகொண்டால், தினமும் நான் உன் கனவில் வந்து உன்னை தொந்தரவு செய்துகொண்டே இருப்பேன்", என்று சொல்லிவிட்டு இறந்து விடுகிறாள்.

அவள் இறந்து பல மாதங்களாகியும், அவன் எந்தவொரு பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்காமல் இருக்கிறான். ஆனால், திடீரென்று ஒரு பெண்ணைப் பார்த்து காதல்வயப்படுகிறான். காதலும் நிச்சயதார்த்தம் வரைச் செல்கிறது. ஆனால் , அன்று இரவு திடீரென்று இறந்துபோன அவன் மனைவி பேயாக வருகிறாள். அவன் தான் செய்து கொடுத்த சத்தியத்தை மீறியதாக குற்றம் சாட்டுகிறாள்.

அன்று முதல் ஒவ்வொரு இரவிலும் பேயாக வந்து அவனை இம்சிக்கிறாள். அதுமட்டுமல்லாமல், அவனுடைய காதலியும் அவனும் பேசிகொண்டதை, ஒரு வார்த்தைகூட விடாமல் அப்படியே ஒப்பிக்கிறாள். இதனால், ஓவ்வொரு இரவிலும் அவன் தூங்கமுடியாமல் தவிக்கிறான்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அவன் ஒரு நாள், இந்த பேய்க்கு ஒரு முடிவு கட்டிவிட வேண்டுமென்று அந்த ஊரில் உள்ள ஒரு ஜென் துறவியிடம் சென்று தன் கஷ்டத்தைச் சொல்லி அறிவுரை கேட்கிறான்.

கதையைக்கேட்ட ஜென் துறவி, "இந்தப் பேய் மிகவும் புத்திசாலியான பேய்தான்" என்கிறார்.

ஆமாம் என்று சொல்லிய அவன், நான் சொல்கிற, செய்கிற அனைத்தையும் எப்படியோ தெரிந்து கொள்கிறது அந்தப் பேய் என்கிறான்.

அத்துறவியோ புன்னகைத்தபடி, "அப்படிப்பட்ட ஒரு பேயைக் கண்டு நீ பெருமைப்பட வேண்டும்" என்கிறார். பின்னர் அவரே, சரி அடுத்தமுறை அந்தப் பேயைப் பார்க்கும்போது நான் சொல்கிறபடி செய் என்று சொல்லி அவனை அனுப்பி வைக்கிறார்!

அன்று இரவு திரும்பவும் அந்தப் பேய் வருகிறது. அவனும் அதன் வருகையை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தவனாய், "உன்னைப் போல் ஒரு புத்திசாலியான ஒரு பேயை நான் இதுவரைப் பார்த்ததேயில்லை, அதுமட்டுமில்லாமல் உன்னிடமிருந்து என்னால் எதையுமே மறைக்க முடியவில்லை. ஆனால், நான் கேட்கும் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் நீ விடை சோல்லிவிட்டால், நான் இந்த திருமணத்தையே நிறுத்திவிடுகிறேன், அதன் பின்னர் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாகவே இருந்துவிடுகிறேன்" என்கிறான்.

சரி, என்ன உன் கேள்வி? என்கிறது பேய். உடனே அவன் ஒரு பையிலிருந்து கடலையை கை நிறைய அள்ளி, " என் கையில் எத்தனை கடலை மணிகள் இருக்கிறது என்று சரியாகச் சொல் பார்க்கலாம்" என்கிறான்.

அவ்வளவுதான், அந்தக் கேள்வியைக் கேட்டு தலைதெறிக்க ஓடிய பேய், அதன் பின்னர் அவன் வாழ்க்கையில் திரும்ப வரவே இல்லை!

கருத்து: பேய் என்பது வெளியில் இல்லை. நம் மனம்தான் அதை நினைத்து அச்சப்படுகிறது.

எதற்கும் கவலை கொள்ளாதே!!!


ஒரு ஊரில் பல ஆண்டுகளாக வயல்களில் ஒரு வயது முதிர்ந்த விவசாயி வேலை செய்து கொண்டிருந்தார். அவர் தனது வீட்டில் ஒரு குதிரையை வளர்த்து வந்தார். ஒரு நாள் அந்த குதிரை எங்கேயோ ஓடி போய்விட்டது. அந்த விஷயத்தை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரிடம் சென்று, "என்ன ஒரு கெட்ட அதிர்ஷ்டம்!" என்று கனிவோடு பேசினர். அதற்கு அந்த விவசாயி "இருக்கலாம்" என்று சொன்னார்.

மறுநாள் காலையில் ஓடிப் போன அந்த குதிரை திரும்ப வந்துவிட்டது. ஆனால் வரும் போது மூன்று குதிரைகளோடு வந்தது. அதை அறிந்தவர்கள், அவரிடம் "எவ்வளவு அற்புதம்" என்று ஆச்சரியத்தோடு வந்து பேசினர். அதற்கும் அவர் "இருக்கலாம்" என்று கூறினார்.

அடுத்த நாள் அந்த விவசாயி மகன் அந்த குதிரையின் மீது சவாரி செய்ய ஆசைப்பட்டு, குதிரையின் மீது ஏறினான். ஆனால் அந்த குதிரையோ அவனை கீழே தள்ளிவிட்டது. அதனால் அவனது கால் உடைந்துவிட்டது. உடனே பக்கத்து வீட்டுக்காரர்கள், அவரிடம் மறுபடியும் கனிவோடு பேசினர். அதற்கும் அவர் "இருக்கலாம்" என்று சொன்னார்.

மறுநாள் இராணுவ அதிகாரிகள் அந்த கிராமத்திற்கு இளைஞர்களை அழைத்து செல்ல வந்தனர். அப்போது கால் உடைந்த அந்த இளைஞனை பார்த்து, சென்றுவிட்டனர். உடனே அக்கம்பக்கத்தினர் அந்த அவரிடம் வந்து "என்ன பாக்கியம் செய்தீர்களோ உங்கள் மகனை விட்டு சென்றுவிட்டனர்" என்று கூறி வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதற்கும் அந்த விவசாயி "இருக்கலாம்" என்றே கூறினார்.

ஆகவே "எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கும். எனவே எதற்கும் கவலை கொள்ளாமல் எல்லாம் நன்மைக்கே என்று ஏற்று கொள்ள வேண்டும்" என்பது நன்கு இக்கதையின் மூலம் புரிகிறது.

எது சந்தோஷம்!!!


ஒர் ஊரில் மாபெரும் ஒரு செல்வந்தன் வாழ்ந்து வந்தான். அவனிடம் அனைத்தும் இருக்கின்றன. ஆனால் சந்தோஷம் மட்டும் இல்லை. அதற்காக அவன் அந்த சந்தோஷத்தைத் தேடிக் கொண்டு வெவ்வேறு நாடுகளுக்குச் சென்று பார்த்தான். ஆனால் அங்கும் அவனுக்கு கிடைக்கவில்லை.

மேலும் அவன் சந்தோஷத்திற்காக மது, மங்கையர், போதைப் பொருள் என்று எல்லாவற்றின் பின்னும் சென்றான். ஆனால் அதனாலும் அவன் மனமானது மகிழ்ச்சி அடையவில்லை. இறுதியாக அவன் "துறவறத்தில் இறங்கினால் மகிழ்ச்சி கிடைக்கும்" என்று யாரோ ஒருவர் சொல்வதைக் கேட்டு, அதற்கும் முயற்சிக்க முடிவெடுத்தான். அதற்காக அவன் தன் வீட்டில் இருக்கும் தங்கம், வைரம், வைடூரியம் என்று அனைத்தையும் ஒரு மூட்டையாக கட்டி எடுத்துக் கொண்டு ஒரு துறவியைப் பார்க்கச் சென்றான்.

அப்போது துறவி ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அதைப் பார்த்த அந்த செல்வந்தன், அந்த மூட்டையை துறவியின் காலடியில் வைத்துவிட்டு, "குருவே! இதோ என் அனைத்து சொத்துக்களையும் ஒரு மூட்டையாக கட்டி வைத்திருக்கிறேன். இனி இவை எதுவும் எனக்கு தேவையில்லை. எனக்கு அமைதியும், சந்தோஷமும் மட்டுமே வேண்டும்." என்று கூறி துறவியிடம் சரணடைந்தான்.

அந்த துறவியோ செல்வந்தன் கூறிய அனைத்தையும் கேட்டுவிட்டு, அந்த மூட்டையை அவசரமாக பிரித்து பார்த்தார். அதில் கண்ணை பறிக்கும் வகையில் இருக்கும் தங்கம் மற்றும் வைரத்தை பார்த்ததும், அந்த மூட்டையை கட்டி தலையில் வைத்துக் கொண்டு ஒரே ஓட்டமாக ஓட ஆரம்பித்தார்.

அதைப் பார்த்த செல்வந்தனுக்குப் பெரும் அதிர்ச்சியாகி விட்டது. நாம் ஒரு போலி சாமியாரிடம் நம் செல்வத்தை கோட்டை விட்டு விட்டோமே! என்று கவலை அடைந்து. கோபத்தில் அந்த துறவியை துரத்த ஆரம்பித்தான்.

துறவியின் ஓட்டத்துக்கு செல்வந்தனால் ஈடு கொடுக்க முடியவில்லை. துறவி சந்து பொந்துகளில் எல்லாம் ஓடி கடைசியில் அதே மரத்தடிக்கு வந்து நின்றார். பின் அந்த செல்வந்தனைப் பார்த்து "என்ன பயந்துவிட்டாயா? இந்தா உன் செல்வம். நீயே வைத்துக் கொள்" என்று மூட்டைக் கொடுத்தார்.

இதுவரை சந்தோஷம் இல்லை என்று நினைத்து கவலையில் இருந்த அந்த செல்வந்தன், கைவிட்டுப் போன தங்கமும், வைரமும் திரும்பி கிடைத்துவிட்டது என்பதில் பெரும் சந்தோஷத்துடன் இருந்தான். அப்போது அந்த துறவி செல்வந்தனைப் பார்த்து, "இதற்கு முன் இந்த செல்வம் உன்னிடம் தான் இருந்தது. ஆனால் அப்போது உன்னிடம் சந்தோஷம் இல்லை! இப்போது உன்னிடம் இருப்பதும் அதே செல்வம் தான், ஆனால் இப்போது உன் மனதில் சந்தோஷம் இருக்கிறது!" என்று கூறி சென்றுவிட்டார்.
இதிலிருந்து என்ன புரிகிறது, "சந்தோஷம் என்பது நமக்கு வெளியே இல்லை. மனதில் தான் இருக்கிறது. ஆனால் அது பலருக்கும் தெரியவில்லை. ஆகவே அதற்காக மற்றவர்களை சார்ந்து இருக்கிறோம்" என்னும் உண்மை நன்கு தெரிகிறது.

மனதில் உறுதி வேண்டும்


ஒரு ஊரில் வில் வித்தையில் சிறந்து விளங்கிய இளம் வீரன் ஒருவன் இருந்தான். அவன் புகழ் பெற்ற வில் வித்தையில் சிறந்த ஒரு ஜென் துறவியைப் பற்றி தெரிந்ததும், தன்னை விட இந்த உலகில் யாரும் வில் வித்தையில் சிறந்தவராக இருக்க முடியாது என்று அந்த துறவியிடம் சென்று தன்னுடன் போட்டியிட்டு ஜெயிக்க முடியுமா என்று சவால் விட்டான்.

அதற்கு அந்த துறவியும் ஒப்புக் கொண்டார். அப்போது அவர்களுக்கிடையே பல போட்டிகள் நடந்தன. இருவருமே வெற்றி பெற்று முன்னேறி வந்தனர்.

அந்த போட்டியில், தூரத்தில் இருக்கும் ஒரு பொம்மையின் கண்ணை ஒரு அம்பால் அடித்து, பின் மற்றொரு அம்பால் அந்த அம்பையே இரண்டாய் பிளந்து, சாதனை செய்து காட்டினான் இளம் வீரன்.

அதைப் பார்த்த அந்த துறவி 'அருமை' என்று சொன்னார். பின் அவர் அந்த இளம் வீரரை அழைத்து, "என்னுடன் ஒரு இடத்திற்கு வா, அங்கு வெற்றி பெற முடிகிறதா என்று பார்ப்போம்" என்று கூறினார். அந்த வீரனும் அவருடன் ஆவலோடு சென்றான்.

துறவியோ அவனை, பெரிய மலைச்சிகரத்திற்கு அழைத்துச் சென்றார். பின்பு அவனிடம், இரண்டு மலைகளுக்கிடையே போடப்பட்டிருக்கும் சிறிய மரப்பாலத்தின் நடுவில் நின்று, துரத்தில் ஒரு மரத்தில் இருக்கும் கனியை அடிக்க வேண்டும் என்று சொன்னார். ஆனால் அந்த பாலமோ ஒருவர் மட்டும் செல்லக் கூடியதாய், பாலத்தின் கீழே பார்த்தால் பாதாளம். விழுந்தால் மரணம் என்பது போல் இருந்தது. பின் அந்த துறவி பாலத்தின் நடுவே சென்று, தன் அம்பை எடுத்து, அந்த பழத்தை சரியாக அடித்தார்.

பின்பு இளம் வீரனிடம் "இப்போது உன் முறை" என்று சொல்லி மலைப்பகுதிக்கு சென்று விட்டார். அவனுக்கோ கை, கால்களெல்லாம் உதறியது. அதனால் அவனால் அந்த பழத்தை சரியாக அடிக்க முடியவில்லை.
அதைக்கண்ட துறவி வீரனை தடவிக் கொடுத்து, "உன் வில்லின் மேல் இருந்த உறுதி, உன் மனதில் இல்லை" என்று சொல்லிச் சென்றார்.

இதிலிருந்து "மற்றவற்றின் மீது வைக்கும் நம்பிக்கையை விட உன் மீது நம்பிக்கை வைத்தால், வெற்றியானது நிச்சயம் கிடைக்கும்" என்பது புரிகிறது.

குரு நாற்காலி!!!

ஒரு ஊரில் ஜென் மாஸ்டர் ஒருவர் இருந்தார். அவருடன் 20 வருடங்களாக, அவரது சீடன் ரின்சாய் என்பவன் இருந்தான். ஒரு நாள் ரின்சாய் மாஸ்டர் அமரும் இருக்கையில் அமர்ந்தான். அப்போது அங்கு வந்த மாஸ்டர், ரின்சாய் தனது இருக்கையில் அமர்ந்திருப்பதை பார்த்துவிட்டு, எதுவும் கோபப்படாமல் அமைதியாக ரின்சாயின் இருக்கையில் அமர்ந்தார்.

சிறிது நேரம் அவர்கள் இருவரும் எதுவும் பேசவில்லை. சிறிது நேரம் கழித்து, ரின்சாய் மாஸ்டரிடம் "நீங்கள் வருத்தப்படுகிறீர்களா? நான் உங்களை அவமதித்துவிட்டேன் என்று நினைக்கிறீர்களா? நான் நன்றி கெட்டு நடப்பதாக நினைக்கிறீர்களா?" என்று கேட்டான்.

அதற்கு மாஸ்டர் சிரித்துவிட்டு "நீ முதலில் மாணவனாக இருந்து சீடனாக ஆனாய், இப்போது சீடனாக இருந்து மாஸ்டராக ஆக தகுதி உடையவனாக இருக்கிறாய். மேலும் என் வேலைகளை பகிர்ந்து கொள்ள நீ தகுதியுடையவனாகிவிட்டாய் என்பதை நினைக்கும் போது, எனக்கு பெருமையாகத் தான் உள்ளது. எனக்கு முன்பே அவை நடக்கும் என்பதும் நன்றாக தெரியும்" என்று கூறினார்.

யாரும் ஏழை இல்லை !!!

ஒரு ஏழை ஒருவன் ஜென் துறவியைப் பார்க்கச் சென்றான். அவரைப் பார்த்து, "குருவே! நான் பெரும் ஏழை. என்னிடம் என் உயிரைத் தவிர வேறு எந்த சொத்தும் இல்லை. நான் ஒரு நல்ல வசதியுடன் வாழ வழி சொல்லுங்கள்" என்று கேட்டான். அதற்கு குரு அவனிடம் "நான் 5000 தருகிறேன், உன் கைகளை என்னிடம் வெட்டிக் கொடு" என்று சொன்னார். அவன் என்னால் 5000 ரூபாய்க்காக என் கைகளை இழக்க முடியாது என்று கூறினான்.

"சரி, நான் உனக்கு 15,000 ரூபாய் தருகிறேன், உன் கால்களை கொடு" என்றார். அதற்கும் அவன் ஒப்புக் கொள்ளவில்லை. "வேண்டுமென்றால் 50,000 ரூபாய் தருகிறேன், உன் கண்களையாவது கொடு" என்று கேட்டார். அதற்கும் அவன் முடியாது என்றான். உனக்கு இருபது லட்சம் வேண்டுமென்றாலும் தருகிறேன், உன் உயிரைக் கொடு என்றார்

அதற்கு அந்த ஏழை, என்னால் நிச்சயம் நீங்கள் சொல்வதை செய்ய முடியாது என்று கூறினான். அதைக் கேட்ட அந்த குரு அவனிடம், "உன்னிடம் உன் உயிரைத் தவிர வேறு எந்த சொத்தும் இல்லை, மேலும் எவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்தாலும் கொடுக்க விரும்பாத விலை மதிப்பற்ற உயிரை கொண்டுள்ள நீ எவ்வாறு ஏழை ஆக முடியும். ஆகவே உழைத்து முன்னேறு" என்று கூறினார்.

எவரையும் இழிவாக நினைக்ககூடாது !!!

எவரையும் இழிவாக நினைக்ககூடாது !!!

ஒருமுறை இக்கியு என்கிற ஜென் துறவியை பணக்கார வாடிக்கையாளர்களில் ஒருவன் விருந்துக்கு அழைத்தான். ஆகவே இக்கியு தான் வழக்கமாக அணியும் உடையில் அந்த விருந்துக்கு சென்றார். அப்போது அங்கு வெளியில் இருந்த பணக்காரன், அவரை துரத்தி அனுப்பினான்.

பின்னர் ஜென் துறவி மீண்டும் வீட்டுக்கு சென்று, ஊதா வண்ணத்தில் பட்டு உடையை அணிந்து, அந்த பணக்காரன் வீட்டின் விருந்துக்கு சென்றார். அதுமட்டுமல்லாமல், அழகான மேலங்கியை மேலே போர்த்தி சென்றார்.

இம்முறை இக்கியுவை மிகுந்த மரியாதையுடன், அந்த பணக்காரன் பெருவிருந்துக்கு வரவேற்று அவரை ஒரு இருக்கையில் அமர்த்தினான். அந்த பணக்காரணன் இக்கியுவை அழகான மேலங்கியுடன் காணப்பட்டதின் காரணமாக, அவரை மரியாதையுடன் வரவேற்றதால். இக்கியு அந்த உடையை கழற்றி இருக்கையில் வைத்து விட்டு " நீங்கள் இந்த உடையை மட்டுமே விரும்பினீர் என நினைக்கிறேன். ஏனெனில் நான் சாதாரண உடையில் வந்த போது என்னை துரத்தி விரட்டினீர்" என்று சொல்லி அங்கிருந்து கிளம்பினார்.

ஆகவே நாம் ஒருவரை விருந்துக்கு அழைக்கும் போது, அவரின் மேல் அலங்காரத்தை வைத்து எடை போடாமல், அவர் மனதை புரிந்து சிறப்போடு வரவேற்பதே சிறந்த பண்பு. மேலும் அன்போடும் பண்போடும் நடந்தால் எத்தனை மேன்மையானவர்களின் அன்பையும் எளிதில் பெறலாம் என்பதை இந்த கதை நன்கு கூறுகிறது.

வேலை செய்யாவிடில் உணவு இல்லை !!!


ஹ்யகுஜோ என்பவர் ஒரு ஜென் மாஸ்டர். அவர் எண்பது வயதிலும் கஷ்டப்பட்டு உழைத்து வாழ்வதை கொள்கையாக கொண்டு வாழ்ந்து வந்தார். மேலும் அவர் தான் முதுமை அடைந்ததையும் பொருட்படுத்தாமல், அவர் தங்கியிருந்த இடத்தில் உள்ள தோட்டத்தை சீரமைப்பது, மரங்களுக்கு நீர் ஊற்றுவது, களை அறுப்பது போன்ற வேலைகளை செய்து வந்தார்.

அதைக் கண்ட ஹ்யகுஜோவின் சீடர்கள், இந்த வயதிலும் தங்கள் குரு வேலை செய்வதைக் கண்டு வருத்தப்பட்டனர். அதை அவர்கள் தங்கள் குருவிடம் எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்கவில்லை. எனவே சீடர்கள் இதற்கு ஒரு முற்று புள்ளி வைக்க முடிவு செய்தனர்.

அதனால் அந்த சீடர்கள் குரு வேலை செய்யப் பயன்படுத்தும் கருவிகளான மம்முட்டி, கடப்பாறை போன்றவைகளை, குருவின் கண்களுக்குப் புலப்படாதவாறு மறைத்து வைத்தனர். ஆனால், குருவோ! வேலை செய்யாத காரணத்தினால், அன்று முழுவதும் சாப்பிடாமல் இருந்தார். சீடர்களும் இதை கவனித்து வந்தனர். பின் மறுநாளும் குரு சாப்பிடாமல் வெறுமையாக அமர்ந்திருந்தார். இதைக் கண்ட சீடர்கள் வேறு வழியின்றி அந்த பொருட்களை குருவிடமே ஒப்படைக்க முடிவெடுத்து குருவின் கண்களுக்குப் தென்படும்படியாக அப்பொருட்களை வைத்தனர்.

குரு தான் வேலை செய்ய பயன்படுத்தும் பொருட்கள் தென்பட்டதும், அவருடைய வேலையை மீண்டும் தொடர்ந்தார். அன்று வேலை செய்ததால் அவர் உணவு அருந்தினார்.

இதைப் பற்றி சீடர்கள் குருவிடம் கேட்கும் போது, "உழைக்காமல் உண்ணும் உணவு உடம்பில் சேராது" என்று கூறினார். பின் சீடர்களிடம் "நீங்கள் வேலை செய்யாவிடில் உணவு இல்லை" என்று சொல்லி உள்ளே சென்று விட்டார்.

சமநிலையில் இருக்கிறேன்

சமநிலையில் இருக்கிறேன்


ஜென் குருமார்களில் புகழ் பெற்றவர் ஷ்வாங்ட்ஸு. அவரது கருத்துக்கள் ஜென் தந்துவங்களில் மிகவும் பிரபலமானவை. அவரிடம் பலரும் வருவதுண்டு. அவர்கள் அவரிடம் பலவற்றைப் பற்றியும் பேசுவார்கள். அவரது கருத்துக்களையும் கேட்டுச் செல்வார்கள்.
அவ்வூரில் ஓர் இசைக்கலைஞன் இருந்தான். அவனிடம் நல்ல இசைத்திறமை இருந்தது. கூடவே கலைஞர்களுக்கே உரிய சில தீய பழக்கங்களும், அவனிடம் இருந்தன. தீய பழக்கங்களின் காரணமாகப் பலரையும், ஏமாற்றியிருந்தான் அவன்.

குருவிடம் வந்த ஒருவர் அவனது தீய பழக்கங்களை விவரித்தார். அவன் ஓர் ஏமாற்றுப் பேர்வழி. மோசடிக்காரன். தீயவன் எனப் பலவாறு அவனை வசைபாடினார்.

அதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த குரு, அவன் ஒரு அற்புதமான கலைஞனாயிற்றே! அவன் இசையை இன்றைக்கெல்லாம் கேட்டு மகிழ்ந்து கொண்டிருக்கலாமே என்றார்.

அப்போது அங்கு வந்த மற்றவர், ஆமாம், அவன் விரல்கள் வித்தை காட்டும். சங்கீதமே அவனிடம் கைகட்டிச் சேவகம் புரியும் ! என்றார்.

அதைக் கேட்ட குரு, அப்படியா? அவன் ஒரு மோசமான ஏமாற்றுப் பேர்வழியாயிற்றே என்றார்.

குறை சொன்னவர், புகழ்ந்தவர், என இருவருமே குழம்பினார்கள். என்ன இது இப்படி பேசினால், அப்படி சொல்கிறார். அந்தப்பக்கம் போனால் இந்தப் பக்கம் வருகிறார். என்று விழித்தனர்.

ஏடாகூடமாகச் சொல்கிறீர்களே அவனைப் புகழ்கிறீர்களா? இகழ்கிறீர்களா? என்று துணிந்து கேட்டார் அவர்களில் ஒருவர்.

இரண்டுமே செய்யவில்லை. வெறும் சமநிலை செய்கிறேன். எந்த மனிதனையும் எடைபோட நாம் யார்? ஒருவனை தீயவன் நல்லவன் என்று கூற உங்களிடம் என்ன அளவுகோல் இருக்கிறது? எதையும் ஒப்புக்கொள்வதோ. எதிர்ப்பதோ என் வேலையும் இல்லை. அதற்கான உரிமையும், என்னிடம் இல்லை. அவன் தீயவனும் அல்ல. உத்தமனும் அல்ல. அவன் அவனே! அவன் அவனாக இருக்கிறான். அவன் செயலை அவன் செய்கிறான். உங்கள் செயல் எதுவோ அதை நீங்கள் செய்யுங்கள்.

நீதி : காலம் மட்டுமே எதனையும் தீர்மானிக்கும். தனி மனித விமர்ச்சனங்கள் என்பது அவரவர் கண்ணோட்டம்தான்.

அவரவர் வேலையே செய்வோம்

நதியோரம் இரண்டு துறவிகள் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். தேள் ஒன்று கவனம் தவறி நீரில் விழுந்து விட்டது.

ஒரு துறவி அந்த தேளினை எடுத்து தரையில் விட்டார். அப்போது அந்த தேள் அவரை கொட்டியது.

கொட்டிய வேகத்தில் மீண்டும் நீரில் விழுந்து விட்டது.

மீண்டும் அதனை எடுத்து அந்த துறவி மேலே விட்டார். தேள் மீண்டும் கொட்டிவிட்டு தண்ணீரில் விழுந்து விட்டது.

இது தொடர்ந்து நடந்தது.

இதைப் பார்த்த இன்னொரு துறவி, அதுதான் கடிக்கிறதே அதை ஏன் காப்பாற்றுகின்றீர் என்று கேட்டார்.

அதற்கு அந்த துறவி, கொட்டுவது தேளின் இயல்பு, காப்பாற்றுவது என்னுடைய இயல்பு என்று சாதாரணமாக சொன்னார்.

நீதி: அதனதன் இயல்பில் அவரவர் வேலையை செய்வோம்.

நீயும் அதுவே


அந்த இடம் மிகவும் அமைதியாக இருந்தது. திடீரென்று அமைதியை கிழித்துக் கொண்டு பெரும் ஆரவாரம் கேட்டது. ஆரவாரத்தின் நடுநடுவே விவாதங்கள், கேள்விகள், பதில்கள், கூச்சல்கள், குறுக்கீடுகள் என்று அந்த இடமே களேபரமாயிருந்தது.

குருவுக்கு இது ஆச்சரியமாக இருந்தது. நானாவிதமாக கேட்ட குரல்களில் ஒன்று அவருக்கு தெரிந்த குரலாக இருக்கவே உற்றுக்கேட்டார் அவர். அது அவரது சீடர்களுள் ஒருவரின் குரல். உடனே அவனை அழைத்து இந்தக் கூச்சலுக்கான காரணத்தைக் கேட்டார்.

குருவே அறிஞர்களின் குழு ஒன்று உங்களைக் காண வந்துள்ளது என்றான் அந்த சீடன்.

அவன் சொல்வதை குரு அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார். நான் அதற்கு அனுமதி கொடுக்க மறுத்தேன். அதனால் ஏற்பட்ட ஆட்சேபக்குரல்கள்தான் இவை. என்ற அவன் தொடர்ந்து உண்மையான ஞானம் இல்லாமல் வெறும் புத்தக அறிவை மட்டுமே வைத்திருப்பவர்களுடன் எங்கள் குரு பேசி நேரத்தை வீணாக்க மாட்டார் என்று அடித்து சொல்லிவிட்டேன் வந்திருப்பவர்கள் வெறும் தர்க்க வாதிகள். போகுமிடமெல்லாம் பற்பல நியாயவாதங்களையும், தர்க்க ரீதியான கொள்கைகளையும், பேசிப் பேசி மக்களிடையே எண்ணற்ற முரண்பாடுகளை உண்டாக்குபவர்கள் என்றான்.

உண்மை, என்ற குரு தொடர்ந்து புன்னகையுடன், ஆனால், நீயும் அவர்களில் ஒருவன் என்பதை மறந்து விட்டாயே உன்னை மிகவும் வித்தியாசமானவன் என்று அவர்களுக்கு காட்ட முற்பட்டு அதே சச்சரவுக்கும் பிரிவுக்கும் நீயே காரணமாகிவிட்டாயே என்றார் அமைதியாக.

நீதி : உண்மை பண்பாட்டு விளக்கத்தால் நிறுவப்படுவதில்லை. மௌனம் தன்னை எப்போதும் மௌனம் என்று எப்போதும் சொல்லுவதில்லை.

ஜென் குருவும் பகல் தூக்கமும்


ஸோயேன் ஷாகு என்ற ஜென் குரு தம் சீடர்களுக்கு அளவற்ற ஆன்மிக தத்துவங்களையும் ஞானத்தையும் கற்பித்தளித்த பின் தனது 61வது வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார். அவருடைய சீடர்களுக்கு கோடைக்காலத்தின் நடுவில் பகல் நேரத்தில் தூங்குவது வழக்கமாக இருந்தது. ஸோயேன் அவர் வாழ்ந்த காலத்தில் இதை ஒருபோதும் கண்டு கொண்டதில்லை. ஆனால் அவர் ஒரு கணமும் பகல் பொழுதில் தூங்கியதில்லை.

ஸோயேன் தனது 12வது வயதிலேயே டெண்டாய் ஆன்மீக தத்துவத்தை கற்றார். ஒரு முறை ஒரு கோடைக்கால பகல் பொழுதில் தன் குரு வெளியே சென்றிருந்த சமயத்தில் ஸோயேன் தன்னை மறந்து உறங்கிவிட்டார். மூன்று மணி நேரம் கழித்து ஸோயேன் கண் விழித்தபோது குரு திரும்பி வந்து கொண்டிருந்தார். வழியை மறிக்கும் வகையில் தரையில் படுத்திருந்த ஸோயேன் சுதாரித்து எழுந்திருக்கும் முன் குரு வந்துவிட்டார். தரையில் படுத்திருந்த ஸோயேனைப் பார்த்து குரு "மன்னிக்க வேண்டும், மன்னிக்க வேண்டும்" என்று முனங்கியபடியே அவர் மீது இடிக்காமல் கவனமாக, ஸோயேனை ஒரு விருந்தினரைப் போல மரியாதையுடன் பார்த்தபடி கடந்து சென்றார்.

அந்த சம்பவத்திற்குப் பிறகு ஒருபோதும் ஸோயேன் பகலில் தூங்கியதே இல்லை.

தெரியாததை தெரியாது என்று ஒப்புக்கொள்


அந்த குருவுக்கு மிகவும் வயதாகிவிட்டது,

ஒருநாள் அவர் தனது சிறந்த சீடர்கள் மூன்று பேரை அழைத்தார். மூவரும் பணிவுடன் அவர் அருகில் வந்தனர். அவர் சொல்லப்போவதைக் கேட்கத் தயாராக நின்றனர். குரு அந்த மூன்று பேரையும் உற்றுநோக்கினார். பின்னர் சற்றுநேரம் ஏதும் பேசாமல் மவுனமாக இருந்தார்.

பிறகு மெல்லக் கூறினார், "எனக்கு வயதாகி விட்டது. நான் ஓய்வு பெற விரும்புகிறேன்."

மூவரும் அதற்கு எதுவுமே பதில் பேசவில்லை. மிகவும் மவுனமாக இருந்தனர்.

"நீங்கள் ஏறக்குறைய எல்லாவற்றையும் கற்றுவிட்டீர்கள் என்று கருதுகிறேன். எனினும் வெறும் தர்க்க அறிவு என்பது வேறு. அனுபவ அறிவு என்பது வேறு. அதுபோலவே தத்துவம் என்பதும், யதார்த்தம் என்பதும் வேறு வேறு." தான் சொன்னது அவர்களுக்கு விளங்க வேண்டும் என்பதற்காகச் சற்று நேரம் அமைதியாயிருந்த குரு, பிறகு தொடர்ந்தார்:

"மனிதன் இறையுனர்வு பெறவேண்டும். அதுதான் முக்கியமானது. அதனால் நீங்கள் மூவரும் தனித்தனியாகச் செல்லுங்கள். பல திசைகளிலும் ஓராண்டு பிரயாணம் செய்யுங்கள். திரும்பி வந்து உங்களுக்கு ஏற்பட்ட மெய்ஞ்ஞான அனுபவத்தைப்பற்றி என்னிடம் சொல்லுங்கள்."

உடனே மூவரும் புறப்பட்டனர். ஓரிடத்தில் அவர்கள் வெவ்வேறு திசைகளில் பிரிந்தனர். நாடெங்கும் பயணம் செய்தனர். பயணத்தில் அவர்களுக்குக் கிடைத்ததோ பலதரப்பட்ட அனுபவங்கள். அவர்கள் பலவகையான மக்களைச் சந்திக்க நேர்ந்தது. அவர்களை பல்வேறு விதமான சம்பவங்களை எதிர்கொண்டன. மூவரும் திரும்பிவர ஒரு வருடத்திற்கு மேல் ஆயிற்று. அப்படித் திரும்பி வந்த மூவரும் சேர்ந்தே குருவிடம் போனார்கள்.

"குருவே! நான் இறைவனைக் கண்டேன். அவர் எங்கும் இருக்கிறார். அவருக்கு உருவம் கிடையாது. எல்லாவற்றிலும், எல்லா இடத்திலும் இறை வியாபித்துள்ளது," என்றான் முதலாமவன்.

"குருவே! இறைவனுக்கு உருவம் உண்டு. அவர் ஒளிவடிவமாகக் காணப்படுகிறார். மனக் கண்ணால் மட்டும்தான் அவரைக் காணமுடிகிறது. மனம் உருகிப் பிரார்த்தனை செய்யும் போதெல்லாம் அவர் பலவிதங்களில் உதவ ஓடி வருகிறார்." என்றான் இரண்டாமவன்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மூன்றாமவன் சங்கடத்துடன் தலையைக் குனிந்து கொண்டான். பின்னர் மெல்லச் சொன்னான். "எனக்கு ஒரே குழப்பாயிருக்கிறது. எதுவும் புரியவில்லை. திட்டவட்டமாக இதுதான் இறைவன் என்று ஊகிக்கவோ, முடிவுகட்டவோ என் அறிவு எனக்கு இடம்தரவில்லை," என்று கூறினான். இதைக் கேட்ட மற்ற இருவரும் அவனைக் கேலியாகப் பார்த்தனர்.

ஆனால் குருவின் முகத்தில் புன்னகை பளிச்சிட்டது. "நீ சொன்னதுதான் உண்மை!" என்றார் அமைதியுடன். அத்துடன், "எனக்குப் பின் இம்மடாலயத்தை நீயே நிர்வகித்து வா!" என்றார்.

நீதி: அறிவுக்கோ, விவாதங்களுக்கோ எட்டாதது ஞானம். தெரியாததைத் தெரியாது என்று ஒப்புக்கொள். தெரிந்ததாக வேடம் பூணாதே என்கிறது ஜென்.

தியானத்தில் பூனை


ஒரு ஊரில் ஆன்மீக மாஸ்டர் இருந்தார். அவர் தினமும் மாலையில் தனது சீடர்களுடன் சேர்ந்து, தியானம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது அவர் தியானம் செய்கையில், அங்கு இருக்கும் ஒரு பூனை அவர் பக்கத்தில் வந்து சப்தம் எழுப்பி, அவரது தியானத்திற்கு இடையூறு ஏற்படுத்திக் கொண்டே இருந்தது. அதனால் அவர் மாலை வேளையில் அந்த பூனையை தியானம் செய்யும் போது மட்டும் கட்டிப் போடுமாறு உத்தரவிட்டார்.

ஆண்டுகள் கழித்து அந்த மாஸ்டர் இறந்துவிட்டார். இருப்பினும் அவரது சீடர்கள் தியானம் செய்யும் போதெல்லாம், அந்த பூனையை கட்டிப் போட்டே தியானம் செய்வார்கள். சில நாட்கள் கழித்து அந்த பூனையும் இறந்துவிட்டது. இருப்பினும் அவர்கள் மற்றொரு பூனையை கொண்டு வந்து கட்டிப் போட்டு தியானம் செய்தார்கள்.

மேலும் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, அந்த மாஸ்டரின் வம்சாவளிகள் தியானம் செய்யும் போதெல்லாம் பூனையை கட்டிப் போட்டு தியானம் செய்வதை பரம்பரை வழக்கமாக கொண்டுவிட்டனர்.

இக்கதையில் இருந்து, அந்த மாஸ்டர் எதற்கு அந்த பூனையை கட்ட சொன்னார் என்று தெரியாத அந்த சீடர்கள், அவர் கூறிய ஒரு காரணத்தினால் அதனை தொடர்ந்து வந்து, பரம்பரை வழக்கமாக்கிக் கொண்டனர். ஆகவே "எதை செய்யும் போதும் எதற்கு செய்ய வேண்டும் என்பதை நன்கு தெரிந்து கொண்டு பிறகு செய்ய வேண்டும்" என்பது நன்கு புரிகிறது.

எண்ணமும்....... கண்ணோட்டமும்......!!!

எண்ணமும்....... கண்ணோட்டமும்......!!!


ஒரு ஊரில் ஹோகென் எனும் ஜென் மாஸ்டர் கோவிலில் வசித்து வந்தார். அப்போது அந்த வழியாக வந்த நான்கு துறவிகள் ஹோகெனிடம், ஒரு நாள் இரவு தங்குவதற்கு அனுமதி கேட்டனர். அவரும் அனுமதி வழங்கினார்.

அன்று இரவு கடும் குளிராக இருந்தது. எனவே, கோயிலுக்கு வெளியில் தீயை மூட்டி குளிர் காய்ந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென அவர்களுக்குள் ஒரு விவாதம் ஏற்பட்டது. அது அக உண்மை பெரிதா, புற உண்மை பெரிதா என்பதுதான்.

இதனிடையே, துறவிகள் வெகு நேரமாகியும் வராததால், ஹொகென் மாஸ்டர் அவர்களை தேடி வெளியில் வந்தார். அப்போது அவர்களுக்குள் நடந்த வாக்குவாதத்தை பார்த்து அருகில் வந்தார். துறவிகள் நால்வரும் அக உண்மை மற்றும் புற உண்மை பற்றிய விவாதித்து கொண்டிருந்ததை கண்டார்.

அப்போது அவர் "அங்கே ஒரு பெரிய கல் இருக்கிறது. அதன் உண்மையான நிலை பற்றியது, உங்கள் புத்தியின் உள்ளே இருக்கிறதா அல்லது வெளியே இருக்கிறதா?" என்று கேட்டார்.

அந்த நால்வரில் ஒருவர் "அந்த கல்லின் உண்மை என் புத்தியின் உள்ளே இருக்கிறத; ஏனெனில் புத்தமதத்தின் படி ஒவ்வொரு பொருளும், ஒருவரின் மனதின் உள்ளே பொருளாக்கப்படுகிறது," என்றார்.

அதற்கு ஹோகென் "அப்படியென்றால் அந்த கல்லின் பாரத்தை உன் புத்தி உணர வேண்டுமே!" என்றார்.

ஆகவே "எந்த ஒரு பொருளைப் பற்றி சொன்னாலும் அதைப்பற்றி, அதன் தன்மைகளைப் பற்றி நம் மனதில் பதிந்து ஒரு எண்ணம் இருக்கும். எனவே, புற உண்மையை அக உண்மை அறிந்து வைத்திருக்க வேண்டும் என்பது புத்தமதத்தின் கருத்தாக இருக்கிறது.

குழப்பத்தின் விடை !!!

குழப்பத்தின் விடை !!!

ஒரு ஊரில் புகழ்பெற்ற துறவி ஒருவர் இருந்தார். அவரிடம் நிறைய மாணவர்கள் இருக்கின்றனர். ஒரு நாள் அவரைப் பார்க்க துறவியின் பழைய மாணவன் ஒருவன் பார்க்க வந்தான். அவரைப் பார்த்து எல்லாம் பேசியப் பின்னர், குருவிடம் "எனக்கு ஒரு குழப்பம்" என்று சொன்னான்.

குருவும், "என்ன?" என்று கேட்டார். அதற்கு மாணவன், "நான் உங்களிடம் படித்த தியானத்தை சரியாக கடைபிடிக்கிறேன். அவை எனக்கு மனஅமைதியையும், அறிவுக் கூர்மையையும் தருகின்றன. அதை நன்கு என்னால் உணர முடிகிறது" என்று சொன்னான்.

"சந்தோஷம். இதில் என்ன குழப்பம்?" என்று குரு கேட்டார். அதற்கு மாணவன் "நான் தியானம் செய்யாத நேரங்களில் நல்லவனாக இருக்கிறேன். ஆனால் மற்ற நேரங்களில் நல்லவனாக இருக்கிறேனா? என்ற சந்தேகம் இருக்கிறது. எனக்கே சில சமயங்களில் தவறுகளை செய்கிறேன் என்றும் தெரிகிறது. தியானம் செய்யும் ஒருவன் இப்படி செய்வது சரிதானா? இதை நினைக்கும் போது என் உள்ளம் கஷ்டமாக இருக்கிறது" என்று கூறினான்.

குரு அதற்கு சிரித்துவிட்டு, "ஆகவே நீ தியானமும் செய்கிறாய், தவறுகளும் செய்கிறாய், அப்படித்தானே...?" என்று கேட்டார். அதற்கு அவனும் "ஆமாம், அது தவறில்லையா? என்று கேட்டான்.குரு அதற்கு ‘இல்லை. நீ தினமும் தியானம் செய், தினமும் தவறு செய்,
தினமும் தியானம் செய், தினமும் தவறு செய், கொஞ்ச நாளில் இவ்விரண்டில் ஏதேனும் ஒன்று நின்றுவிடும்!' என்று கூறினார்.

உடனே அந்த மாணவன் "ஒரு வேளை என் தியானம் நின்றுவிட்டால்?" என்று வினவினான். குரு "அதுவும் நல்லது தான். அப்போது தான் உன் உண்மையான இயல்பு உனக்கு புரியும்" என்று கூறினார்.

Sunday, 7 October 2012

சந்தோஷத்தின் வழி!!!


ஒருவர் எப்போதுமே மனது கஷ்டத்துடன் வாழ்ந்து வந்தார். ஒரு நேரத்தில் அவரால், மனக்கஷ்டத்தை தாங்க முடியவில்லை. அதனால் அவர் ஒரு ஜென் துறவியை நாடி, அதற்கான காரணத்தை அறிய வேண்டும் என்று முடிவெடுத்து, துறவியைப் பார்க்க புறப்பட்டார்.

துறவி ஒரு மரத்தின் அடியில் தியானம் செய்து கொண்டிருந்தார். அவரிடம் அருகில் சென்று "குருவே! எனக்கு எப்போதுமே மனம் கஷ்டமாக உள்ளது. அதை எப்படி போக்குவது?" என்று கேட்டார். அதற்கு குரு அவரிடம், "ஒவ்வொரு நாளும் காலையில் எழும் போது நீ என்ன நினைப்பாய்?" என்று கேட்டார்.

அதற்கு வந்தவர், "இன்றும் மனம் கஷ்டமாக இருக்குமோ! என்று நினைத்து எழுவேன்" என்றார். அப்போது குரு "இது தான் தவறு. நீ உன் மனம் கஷ்டமாக இருப்பதற்கு நீ தான் காரணம். காலையில் எழும் போது நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று மனதில் நீயாகவே நினைத்தால், கண்டிப்பாக நீ சந்தோஷத்தை உணர்வாய். கஷ்டம் என்று நினைத்தால் கஷ்டத்தை தான் உணர்வாய்" என்று கூறினார்.

ஆகவே எதுவுமே, அவரவர் மனநிலையைப் பொறுத்தே உள்ளது என்பதை இந்த கதை நன்கு தெளிவாக கூறுகிறது.