Monday 8 October 2012

சந்தோஷத்தின் வழி!!!




ஒருவர் எப்போதுமே மனது கஷ்டத்துடன் வாழ்ந்து வந்தார். ஒரு நேரத்தில் அவரால், மனக்கஷ்டத்தை தாங்க முடியவில்லை. அதனால் அவர் ஒரு ஜென் துறவியை நாடி, அதற்கான காரணத்தை அறிய வேண்டும் என்று முடிவெடுத்து, துறவியைப் பார்க்க புறப்பட்டார்.

துறவி ஒரு மரத்தின் அடியில் தியானம் செய்து கொண்டிருந்தார். அவரிடம் அருகில் சென்று "குருவே! எனக்கு எப்போதுமே மனம் கஷ்டமாக உள்ளது. அதை எப்படி போக்குவது?" என்று கேட்டார். அதற்கு குரு அவரிடம், "ஒவ்வொரு நாளும் காலையில் எழும் போது நீ என்ன நினைப்பாய்?" என்று கேட்டார்.

அதற்கு வந்தவர், "இன்றும் மனம் கஷ்டமாக இருக்குமோ! என்று நினைத்து எழுவேன்" என்றார். அப்போது குரு "இது தான் தவறு. நீ உன் மனம் கஷ்டமாக இருப்பதற்கு நீ தான் காரணம். காலையில் எழும் போது நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று மனதில் நீயாகவே நினைத்தால், கண்டிப்பாக நீ சந்தோஷத்தை உணர்வாய். கஷ்டம் என்று நினைத்தால் கஷ்டத்தை தான் உணர்வாய்" என்று கூறினார்.

ஆகவே எதுவுமே, அவரவர் மனநிலையைப் பொறுத்தே உள்ளது என்பதை இந்த கதை நன்கு தெளிவாக கூறுகிறது.


                                                                                                             - தொடரும்....

ஒரு நல்ல சீடனின் அழகு!!!


ஓர் ஊரில் ஜென் மாஸ்டர் கத்தான் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு குறிப்பில் "ஒரு சீடன் என்பவன் யார்? என்பதை, சீடன் என்பவன் புத்தமதக் கருத்துக்களை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும், மடாலயத்தை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் மற்றும் அரிசி மூட்டை, துணி மூட்டை ஆகியவற்றை எங்கும் பத்திரமாக தூக்கவும், சுத்தமாக அவற்றை வைத்துக் கொள்ளவும் வேண்டும்" என்னும் மூன்று கருத்துக்களின் மூலம் தெளிவாக கூறியுள்ளார்.

அதேப்போல் தான் கசன் என்னும் சீடன், தன் குருவிற்கு மிகவும் ஒரு நல்ல சீடனாக இருந்தான். ஆனால் அவனுடைய குரு மிகவும் கோபம் கொள்பவர். அவர் தன் சீடர்களுக்கு புத்தமதக் கருத்துக்களை சொல்லிக் கொடுக்கும் போது எப்போதுமே மிகவும் கடுமையாகவே இருப்பார். சிலசமயங்களில் அடிக்க கூட செய்வார். அதனாலேயே நிறைய சீடர்கள் அவரிடம் கல்வி கற்காமல் சென்றுவிட்டனர்.

ஆனால் கசன் மட்டும் அவரை விட்டு செல்லாமல், அவருடன் இருந்தான். ஏனெனில் அவன் ஜென் மாஸ்டர் கத்தான் கூறிய ஒரு குறிப்பான "நல்ல சீடனாக இல்லாதவன், எங்கு சென்றாலும் தனது குருவின் செல்வாக்கை பயன்படுத்துவான், நியாயமான சீடனாக இருப்பவன் தனது குருவின் இரக்கத்தால் ஈர்த்து மட்டும் இருப்பான், ஆனால் நல்ல சீடன் என்பவன் அவருடன் இருந்து அவரிடம் இருக்கும் அனைத்தையும் கற்றுக் கொண்டு வளர்வான்" என்பதை படித்ததால், இவனும் ஒரு நல்ல சீடனாக தன் குருவிற்கு இருக்கிறான்.

ஒரு கையின் ஓசை!!!


ஒர் ஜென் மடாலயத்தில் ஒரு பன்னிரண்டு வயதான டோயோ என்னும் சிறுவன் தங்கி வாழ்ந்து வந்தான். அவன் ஒவ்வொரு நாளும் மக்கள் குருவிடம் உதவி, வழிகாட்டல் முறைகளை கேட்டு செல்வதை கவனித்துக் கொண்டிருந்தான். இது போகப்போக அவனை மிகவும் ஈர்த்தது. ஒரு நாள் குரு அதேப்போல் மக்களிடம் அவர்களது குறைகளை கேட்டுக் கொண்டிருக்கும் போது, அவனும் குருவிடம் கேட்பதற்காக, குருவை தன் மீது பார்வை செலுத்த, அவர் முன் மிகவும் மரியாதையுடன் ஏழு முறை தலைகுனிந்து குருவை வணங்கினான். அவனது செயலைக் கண்டு மாஸ்டர் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.

பின் குரு அவனை அழைத்து டோயோ "உனக்கு என்ன வேண்டும்?" என்றார். அதற்கு அவன் குருவிடம் "நான் உண்மையை தேடி வந்துள்ளேன், அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான்.

குருவோ இவன் ஏதோ விளையாட்டாக கேட்கிறான் என்று எண்ணி, அவனிடம் "இரண்டு கைகளை கொண்டு ஒரு ஒலியை உருவாக்க முடியும். ஆனால் ஒரு கை கொண்டு ஒலி எழுப்புவது எப்படி என்பதை கண்டறிந்து என்னிடம் சொல்" என்றார்.

டோயோவும் மரியாதையுடன் மீண்டும் ஏழு முறை தலைகுனிந்து வணங்கிவிட்டு, அவனுடைய அறைக்கு சென்று, தியானம் செய்ய ஆரம்பித்தான். பின்பு மூன்று நாட்கள் கழித்து "நீர் துளிகள் எழுப்பும் ஒலியா?" என்றான். குருவோ "இல்லை" என்றார்.

பின் மரத்தின் அடியில் சென்று தியானம் செய்ய ஆரம்பித்தான். பிறகு மூன்று மாதம் கழித்து, "மரங்களில் வெட்டுக்கிளி எழுப்பும் ஒலியா? காற்றின் ஒலியா?" என்றான். குருவோ "அதுவும் இல்லை. சரியாக தியானம் செய்!" என்று சொன்னார்.

ஒரு வருடம் ஆனப் பின்னரும் அவன் வராததால், குருவே அவனை தேடி வந்தார். அவனோ ஒரு மரத்தின் கீழ் உட்கார்ந்து தியானத்தில் மூழ்கி இருந்தான். அப்போது அவன் உடலில் சில தெரியாத அமைதியான அதிர்வுறும் ஒலியினால், அவனது உடல் மிகவும் மென்மையான வெறும் காற்று நகருவது போல் நடனம் ஆடிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த மாஸ்டர், டோயோவை தொந்தரவு செய்ய விரும்பவில்லை, ஆகவே அவர் அங்கேயே காத்திருந்தார்.

பல மணி மணி நேரம் கடந்துவிட்டது. சூரியனோ மறையும் நிலையில் இருந்தபோது மாஸ்டர் "டோயோ..." என்று அழைக்க, அவன் கண்களை திறந்து "இது தான் அந்த விடை" என்றான்

குருவும் "ஆம், நீ அதை அடைந்து விட்டாய்!" என்றார்

இந்த ஓம் என்ற ஒலி தான் அது. அது தியானம் செய்யும் போது அனைத்து ஒலியும் மனதில் இருந்து மறைந்து, உங்களுக்கு ஒரு குரல் கேட்கும்.

அந்த ஒலி தியானத்தின் முழுமையை அடையும் பொழுதே கேட்கும். அதனால் ஓம் என்ற இசை நம்முள் உணரப்படும். இதைதான் உபநிடதங்கள் ஓம் என்ற ஒலியை ஒரு முழு குறியீடாக அமைத்துள்ளனர்.

குறை சொல்ல வேண்டாம்!!!


துறவி ஒருவர் தன் மடாலயத்தில் சீடர்களுடன் தங்கி வாழ்ந்து வந்தார். அவர் ஒரு நாள் தன் சீடனுடன் டீ குடிக்க சென்றார். அப்போது அந்த சீடனான ரோஷி என்பவன் துறவியிடம் "ஏன் தான் இந்த ஜப்பானியர்கள் இந்த டீ கோப்பையை இவ்வளவு மெல்லியதாக தயாரித்துள்ளனரோ, இது கை நழுவி கீழே விழுந்தாள் உடனே உடைந்துவிடும் போலவும் உள்ளது. இதை கொஞ்சம் பருமனாக செய்திருந்தால் கீழே விழுந்தாலும் உடையாமல் இருக்கும் அல்லவா!" என்றான்.

அதற்கு குருவும் அவனிடம் "அவர்கள் கோப்பையை மெல்லியதாக தயாரித்ததில் தவறில்லை. அவற்றை நம்மால் சரியாகக் கையாளத் தெரியாததே தவறு. முதலில் நாம் எந்த ஒரு பொருளையும் எப்படி கையாள வேண்டும் என்பதை தெரிந்திருக்க வேண்டும். அதை விட்டு மற்றவர்களை குறை கூறுவது தவறு" என்று கூறினார்.

இந்த கதையிலிருந்து என்ன தெரிகிறதென்றால் "நாம் நம்மை பற்றி முழுவதும் அறியாமல் பிறரை குறை கூறுவதில் முழுமையாக உள்ளதால் எல்லாம் தவறாகவே தெரிகிறது. ஆகவே பிறரைக் குறை கூறுவதை நிறுத்திவிட்டு நம்மை நாம் திருத்திக் கொள்ள முயல வேண்டும்" என்பது நன்கு புரிகிறது.

யாருடனும் ஒப்பிட வேண்டாம்!


ஒரு பேராசிரியர் ஒரு ஜென் ஞானியிடம் சென்று, ''நான் ஏன் உங்களைப்போல இல்லை? உங்களைப்போல என்னால் ஏன் அமைதியாய் இருக்க முடியவில்லை? உங்களுக்கு இருக்கும் அறிவு எனக்கு ஏன் இல்லை?'' என்று கேட்டார்.

ஞானி சொன்னார், ''இன்று முழுவதும் என்னுடன் இருந்து என்னை கவனித்து வா. எல்லோரும் சென்றவுடன் உன் கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன்.''அன்று முழுவதும் ஏராளமான மக்கள் ஞானியை வந்து தரிசித்து சென்றனர். மாலையில் எல்லோரும் போன பின் பேராசிரியர் ஞானியிடம் தன் கேள்விக்கு பதில் சொல்ல ஞாபகப்படுத்தினார்.

அன்று பௌர்ணமி. முழு நிலவு வானில் அழகுடன் ஜொலித்தது. ஞானி கேட்டார்,''இன்னுமா உனக்கு பதில் கிடைக்கவில்லை?நான் மக்களுக்கு சொன்ன பதில்களைக் கவனித்திருந்தால் உனக்கு பதில் கிடைத்திருக்கும்.பரவாயில்லை வெளியில் வா.

இந்த அமைதியான தோட்டத்தில் முழு நிலவின் அழகினைப் பார்.இந்த நிலவொளியில் இந்த நீண்ட மரமும் அதன் அருகில் உள்ள செடியும் எவ்வளவு அழகாய் இருக்கின்றன?''. பேராசிரியர் பொறுமை இழந்து தன் கேள்விக்கு பதில் சொல்லுமாறு கேட்டார்.

ஞானி சொன்னார்,''உன் கேள்விக்கு பதில் சொல்கிறேன். இந்த நீண்ட மரமும் அதன் அருகில் உள்ள செடியும் வெகு நாட்களாக என் தோட்டத்தில் இருக்கின்றன. ஆனால் ஒரு நாளும் இந்த செடி தான் ஏன் இந்த பெரிய மரம் போல இல்லை என்று மரத்திடம் கேட்டதில்லை.அதேபோல மரமும் அந்த செடியிடம் தான் ஏன் செடிபோல இல்லை என்று கேட்டதில்லை. மரம், மரம் தான். செடி, செடி தான். மரம் தான் மரமாயிருப்பதிலும்,செடி, தான் செடியாயிருப்பதிலும் மகிழ்ச்சியுடன் தான் இருக்கின்றன என்றார்."
ஒப்பீடு தான் மனிதனின் அனைத்து பிரச்சினைகளுக்கும் மூலக் காரணம்.

விதியின் கதை


போர்க்களத்தில் ஜப்பானிய வீரர்களிடம் மறுநாள் போரில் எப்படி தாக்குதல் நடத்துவது என்பதைப் பற்றி படைத் தளபதி உரையாற்றிகொண்டிருந்தார். எதிரணியினரை விட இவரது அணியில் ணியில் குறைந்த வீரர்களே இருந்தனர். தளபதிக்கு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தாலும், போர் வீரர்களிடையே அச்சமும், சந்தேகமும் சூழ்ந்திருந்தது. அவர்களிடையே நம்பிக்கையை அதிகரிக்கச் செய்ய என்ன செய்வது என்று யோசித்தான் தளபதி.

அனைவரையும் அழைத்தான். " நண்பர்களே, நாம் போரின் இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டோம். தாக்குதலைத் தீவிரப் படுத்தினால் வெற்றி நமதே. ஆனாலும் குறைந்த வீரர்களைக் கொண்டு எவ்வாறு வெற்றி பெறுவது என்ற சந்தேகம் நம்மிடையே சூழ்ந்துள்ளது. அதனால் கடவுளை வேண்டிக் கொண்டு இந்த நாணயத்தை சுண்டுகிறேன். தலை விழுந்தால் தாக்குதலைத் தொடரலாம். வெற்றி நமதே. பூ விழுந்தால் தோல்வி. நாம் சரணடைந்து விடலாம்" என்றான்."தலைவிதியை நாணயம் தீர்மானிக்கட்டும்" என்றான்.

அனைவரும் ஆமோதித்தனர். கடவுளை வேண்டியவாறே சுண்டினான். விழுந்தது தலை. வீரர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி. தன்னம்பிக்கை பொங்க தாக்குதலைத் தொடர்ந்தனர். வெற்றி வாகை சூடினார்கள்.

போர் முடிந்ததும் தளபதியின் உதவியாளன் , "தலை விதியை யாராலும் மாற்ற முடியாது. நாணயம் காட்டியது சரியாக இருக்கிறது"என்றான். தளபதியும் சிரித்துக் கொண்டே சொன்னான் "சரியாகச் சொன்னாய்" என்றவாறே, நாணயத்தை அவனிடம் காட்டினான். "நாணயத்தின் இருபக்கங்களும் தலை"

கருத்து: நம்பிக்கை தான் வெற்றியைத் தருகிறது.

பயனற்ற வாழ்கை


வயதான விவசாயிக்கு சிறிது நிலம் இருந்தது. வயதான காரணத்தினால் அவரால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. வீட்டில் பேசாமல் உட்கார்ந்து கொண்டிருந்தார். அந்த விவசாயிக்கு ஒரு மகன் இருந்தான். அவன் நிலத்தில் வேலை செய்து விட்டு வந்து தனது தந்தையை பார்த்தான்.

தந்தை ஒரே இடத்திலேயே உட்கார்ந்து கொண்டிருந்தார். இதனைப் பார்த்த மகன் இனி தந்தை நமக்கு பயன்பட மாட்டார் என்று எண்ணி சவப்பெட்டி ஒன்றை செய்து வீட்டிற்கு எடுத்து வந்தான்.

அதைக் காட்டி தனது தந்தையிடம் சவப்பெட்டிக்குள் சென்று படுத்துக் கொள் என்று கூறினான்.அதிர்ச்சியடைந்த தந்தையோ ஒன்றும் கூறாமல் உள்ளே ஏறி படுத்துக் கொண்டார். என்னை கொண்டுபோய் எறிந்து விடப்போகிறாய் என்று தெரியும் அதற்கு முன்னதாக உனக்கு ஒன்று கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன் என்று வயதான தந்தை தனது மகனைப் பார்த்து கேட்டார்.

உடனே மகன் வெறுப்புடன், "என்ன கூற வேண்டும்?" என்று கேட்டான்.

"என்னோடு சேர்த்து இந்த சவப்பெட்டியையும் எறிந்து விடாதே. இதை பத்திரமாக வைத்துக் கொள். ஏனெனில் உனது மகனுக்கு இது உதவியாக இருக்கும்" என்று கூறினார் அந்த வயதான தகப்பனார்.

கருத்து: முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.